சிவசேனாவின் முதலமைச்சர் கனவு நனவாகுமா....

சிவசேனாவின் முதலமைச்சர் கனவு நனவாகுமா என்பது குறித்தும், அந்த கட்சி கடந்து வந்த பாதையையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
சிவசேனாவின் முதலமைச்சர் கனவு நனவாகுமா....
Published on

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 1960 களில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. இந்த வகையில் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் வர்த்தக தலைமையகமான மும்பையின் பெரும்பாலான தொழில்கள் குஜராத்தியர்கள் ஆதிக்கத்தில் தான் இருந்தது. இதுதவிர, தென் இந்தியர்கள் ஓயிட் காலர் ஜாப் என்று அழைக்கப்படும் உயர்பதவிகளில் ஆதிக்கம் செலுத்தியதாக மராட்டியர்கள் கருதினர். இந்நிலையில், கார்ட்டுனிஸ்டான பால் தாக்ரே வாராந்திர பத்திரிகையான மார்மிக்கில், இடம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் 1966 ஆம் ஆண்டு ஜீன்​ மாதம் 16 ஆம் தேதி சிவசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். வேலையில்லா மராத்திய இளைஞர்களை தன்பக்கம் இழுத்தது சிவசேனா. ஒரு கட்டத்தில் தென் இந்தியர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் விரட்டி அடிக்கப்பட்டனர். மராத்தியர்களுக்கே முன்னுரிமை என்ற இன உணர்வுடன் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி பெற்றது, சிவசேனா. 1970 ஆம் ஆண்டுகளில் இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க, ஆரம்பத்தில் இருந்த மண்ணின் மைந்தன் கொள்கை செயல் இழந்தது.

1989 ஆம் ஆண்டில் இருந்து பா.ஜ.க. உடன் தேர்தல் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தொடங்கியது சிவசேனா. கடந்த 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிராவில் சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றது. 1999 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்த கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்தது. 25 ஆண்டுக்கால கூட்டணி 2014 சட்டப் பேரவை தேர்தலின் போது முறிந்தது. பின்னர் ஆட்சியிலும், மும்பை பெரு மாநகராட்சியிலும் இருகட்சிகளும் இணைந்து செயல்பட்டன. கடந்தாண்டு ஜனவரியில், இரண்டு கட்சிகளும் மீண்டும் பிரிந்த நிலையில், மக்களவைத் தேர்தலை இணைந்து எதிர்கொண்டு பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலை இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்து சந்தித்துள்ளன. உத்தவ் தாக்கரேவை கட்சியின் தலைவராக்கியதால், அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே 2005ல் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற தனிக்கடசியைதொடங்கினார். ஆனால் மகராஷ்டிரா அரசியலில் ராஜ் தாக்கரேவின் கட்சி எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை. பால் தாக்ரே மறைவுக்கு பின்னர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவும் அரசியலுக்கு வந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com