LJK || தேசிய சுகாதார பணியாளர்கள் போராட்டம் - லட்சிய ஜனநாயக கட்சி ஆதரவு
புதுச்சேரியில், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி புதுச்சேரி சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு, தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், ஊழியர்கள் தங்களின் நீண்டகால வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக அரசு அறிவித்த சம்பள உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். முன்னதாக, ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இதில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாநிலச் செயலாளர் அனிதா ஆகியோர் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி போராட்ட களத்திற்கு நேரில் வந்து ஊழியர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மக்களுக்குச் சுகாதாரச் சேவை வழங்கும் தங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பையும், ஊதியத்தையும் வழங்காமல் மௌனம் காப்பது வேதனையளிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
