உட்கட்சி பிரச்சினை...கூட்டணி விவகாரம்...காங். கூடாரத்தில் மீண்டும் சலசலப்பு...!
உட்கட்சி பிரச்சினை, கூட்டணி கட்சிகளுடன் உரசல் என தமிழக காங்கிரஸ் மீண்டும் சலசலப்பை சந்தித்துள்ள நிலையில், இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தரவுகள் பகுப்பாய்வு பிரிவு தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமாக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி கொளுத்திப் போட்ட நெருப்பு கட்சி முழுக்க கபகபவென எரிந்தது...
உத்தரப்பிரதேசத்தை விட தமிழகம் தான் அதிக கடன் வாங்குவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்து விட்டது...
ஏனெனில் தனது கருத்தை தெரிவிக்கும் முன் பிரவீன் சக்கரவர்த்தி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்தது தான் சந்தேகத்தை பெரிதுபடுத்தியது...
திமுக தலைவர்கள், கூட்டணி கட்சியினர் பிரவீன் சக்கரவர்த்தியை கண்டித்த நிலையில்,
இந்தியாவிலேயே வளர்ச்சியில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும், பிரவீன் சக்கரவர்த்தி உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ...
அதேபோல் உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சியை தூக்கி பிடித்து, தமிழகத்தில் நடைபெறும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியை தாழ்த்தி பேசுவதை ஒருபோதும் தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதிக்காது என்று தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை... பிரவீன் சக்கரவர்த்தி மீது புகார் தெரிவித்து காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளதாக விளக்கினார்...
பிரவீன் சக்கரவர்த்தியை கண்டித்து விசிக எம்பி ரவிக்குமார், துரை வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்த நிலையில், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வேறுவிதமாக எதிர்வினையாற்றினார்..
“காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் உத்தரவிடுவதா? உங்கள் உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?“ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்...
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன, பொது அழுத்த அரசியலால் அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்...
இதையடுத்து தங்கள் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சம்பந்தப்பட்ட தலைவர்கள் விளக்கிய நிலையில்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான கனகராஜ், அரசியல் மரியாதையையும் ஒழுக்கத்தையும் மாணிக்கம் தாகூர் எங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை என்று கடுமையாக கண்டித்தார்...
லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம் என தெரிவித்த வைகோ... கூட்டணி பங்கத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என விளக்கியிருந்தார்..
விவகாரம் விபரீதமாவதை உணர்ந்த செல்வ பெருந்தகை..உட்கட்சி விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என கூட்டணி கட்சியினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்..
ஆனால் இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ஒரு சிலரின் சுயநலத்திற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது... ராகுல் காந்தியின் அரசியலுக்கு நேர் எதிராக தமிழக காங்கிரஸ் செல்கிறது என அதிரடியாக தெரிவித்திருந்தார்.
உட்கட்சி விவகாரம்..கூட்டணி கட்சிகளுடன் சலசலப்பு என காங்கிரஸ் தொடர்ந்து சிக்கலில் உழன்று வந்த நிலையில்.. தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது வெறும் வதந்தி என்றும்... ஜோதிமணி புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்...
அத்துடன் திமுகவுடன் தான் தாங்கள் இப்போதும் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூறிய கிரிஷ் சோடங்கர்... ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த கேள்விக்கு, எந்த கட்சியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என கூறுமா? நாங்கள் என்ன NGOவா எனவும் கேள்வி எழுப்பியது அரசியலில் சலசலப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது...
