ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தின் வளர்ச்சியால், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி

ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தின் வளர்ச்சியால், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தின் வளர்ச்சியால், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் இழுபறி
Published on

ஹரியானா மாநிலம் உருவானதில் பெரும் பங்கு ஆற்றியவர் முன்னாள் துணை பிரதமர் தேவிலால். எமர்ஜென்சிக்கு எதிராக சிறை சென்றதால், ஹரியானாவின் சிங்கம் என அழைக்கப்பட்ட தேவிலால், இந்திய தேசியலோக் தளம் கட்சியை உருவாக்கி அம்மாநில முதல்வரானார். பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனது கட்சியை வளர்த்து வலிமை பெற்ற அவர், விபி சிங் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராகவும் உயர்ந்தார். தேவிலாலுக்கு பிறகு, அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா மாநில முதலமைச்சரானார். ஊழல் வழக்கில் அவர் சிறை சென்றதால், அவரது மகன் அபய்சிங் சவுதாலா தலைமையில், இந்திய தேசிய லோக் தளம் கட்சி செயல்பட்டது. அவருக்கு எதிராக சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா, போர்க்கொடி உயர்த்தியதோடு, ஜனநாயக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். கட்சியின் சின்னம் செருப்பு. இந்த கட்சி தான், பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் கடும் பின்னடைவை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், தேவிலால் குடும்ப வாரிசுகளின் இரண்டு கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவியது. தற்போது, தேர்தல் முடிவில், ஹரியானாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 45 இடங்கள் தேவை என்ற நிலையில், 40க்கும் குறைவாகவே வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 30க்கு சற்று அதிகமான இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால், துஷ்யந்த் சவுதாலாவின் கட்சிக்கு 10க்கும் அதிகமான இடங்கள் கிடைத்துள்ளதால், அந்த கட்சியின் ஆதரவு இல்லாமல் அடுத்த ஆட்சி அமையாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும், அதற்கு துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு தேவை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், ஹரியானாவில் தேவிலால், சவுதாலா குடும்பத்தினரின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com