விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை தேவை - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் ஒசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
விமான சேவையை விரைந்து துவங்க நடவடிக்கை தேவை - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை
Published on

இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு, அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் UDAN திட்டத்தின் மூலம், தமிழகத்தில் விமான இணைப்புகளை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, குறிப்பிட்டுள்ளார்.

சேலம் விமான நிலையம் மூலம், சேலம் மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என்பதால், அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே போல், சென்னை - பெங்களூரு தொழிற்பேட்டைகளின் மேம்பாட்டுக்கு உதவிடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூரில், விமான சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த கடிதத்தில், முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உதான் (UDAN) திட்டத்தின் கீழ், திட்ட முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்ட நெய்வேலியிலும், விமான சேவைக்கு

விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல, ஆன்மீகவாதிகளின் முக்கிய கேந்திரமாக ராமேஸ்வரம் விளங்குவதால், மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திலும் விமான சேவை கொண்டு வரும் விதமாக, இந்த திட்டத்தின் 2ம் நிலையில், விமான இயக்கத்திற்கு ஆவண செய்ய வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com