பாமக, தேமுதிக கனவில் விழுந்த இடி..ஒரே அடியில் நொறுக்கி விட்ட ஈபிஎஸ் - திரை மறைவில் வலைவீசும் பாஜக

x

இன்னும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதிமுக தலைமையில் கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள அதிமுக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..

இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடனான பேச்சுவார்த்தை சுமூக முடிவுகளை கொடுத்துள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி துளிர் விடவில்லை.

எஸ்.டி.பி.ஐ கட்சி தவிர பாமக, தேமுதிக கட்சிகளுடன் பல நாட்களாக பேச்சுவார்த்தை மட்டுமே அதிமுக நடத்தி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் மாநிலங்களவை சீட் என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருந்த தேமுதிக,

மக்களவை தொகுதிகளுடன் மாநிலங்களவை சீட் வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது.

அதே போல், பாமகவும் மக்களவை தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கிட வேண்டும் என்ற நோக்குடனே அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இந்நிலையில் 10 மக்களவை தொகுதிகளை பாமக கோரியுள்ள நிலையில், 7 தொகுதிகள் வரை அதிமுக கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதே வேளையில், தேமுதிக 7 தொகுதிகளை கோருவதாகவும், 3 முதல் 4 தொகுதிகள் கொடுக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிகிறது.

தற்போது சட்டமன்றத்தில் ஈபிஎஸ் வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின்படி, ஒரேயொரு மாநிலங்களவை சீட் மட்டுமே அதிமுக பெற முடியும்.

இந்நிலையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளும் மாநிலங்களவை சீட் கோருவது அதிமுகவிற்கு நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தேமுதிக, பாமக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி மற்றொரு அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியினர் பாஜகவின் கூட்டணிக்காக காத்து கிடக்கின்றனர்.

ஆனால் இது குறித்து பாஜக உறுதிப்படுத்தாததால், இக்கூட்டணியும் இறுதியாகவில்லை.

அதே வேளையில் பாமக, தேமுதிக கட்சிகள் இந்த கூட்டணியில் சேர திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் கூட்டணியை இறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என அதிமுக தொண்டர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்