மத்திய பட்ஜெட்.. எதிர்பார்க்கும் தமிழ்நாடு - காத்திருக்கும் மெகா சஸ்பென்ஸ்

x

இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அதுவே 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்து பணியாற்றுகிறது.

இந்திய அளவில் 2 ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

தமிழக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த 26,000 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று ஜெய்சால்மரில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டிருந்தார்.

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு விடுவிக்காமல் இருக்கும் 2,152 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும், வெள்ள நிவாரண நிதியாக 6 ஆயிரத்து 675 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவேண்டும் என கேட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க துணைபுரியும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டுக்கு இடையே 4-வது வழித்தடம், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி-ஓசூர் இடையே புதிய ரயில்பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை- தூத்துக்குடி ரயில்பாதை, மீஞ்சூர்-மதுராந்தகம் இடையே ரயில் பாதை, சென்னை-சேலம்-கோவையை இணைக்கும் மிதவேக ரயில் பாதை மற்றும் சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுள்ளது.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே உயர்மட்ட விரைவுச்சாலை அமைத்தல், பிரதமரின் வீடு திட்டங்களில் செலவு வரம்பை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் தமிழகம் தரப்பில் இருக்கிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவுகிறது.

மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி கிடைக்கும் போது தமிழக வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வாய்ப்பாக அமையும்.

மத்திய அரசின் வரி பகிர்வில் தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழக அரசு விமர்சித்து வரும் வேளையில், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிடுவாரா? என்பது அவரது பட்ஜெட் உரையிலே தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்