4.36 மணிக்கு அமித்ஷா ட்வீட் - 5 மணிக்கு தலைகீழாக திரும்பிய தமிழக அரசியல்

x

காலை 10 மணிக்கு அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை, தமிழக பாஜக தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் காலை ஆலோசனை நடத்தினார்.

பின்னர் காலை 10:52 மணிக்கும் ஐ.டி.சி. ஹோட்டலில் இருந்து கிளம்பி, விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டிற்கு சென்ற அமித்ஷா, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, தமிழிசைக்கு ஆறுதல் கூறினார்.

அங்கிருந்து காலை 11:20 மணிக்கு புறப்பட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் 2 மணிநேரம் வரை நீடித்தது. பின்னர் குருமூர்த்தி இல்லத்திலேயே மதிய உணவருந்தினார். பின் அங்கிருந்த புறப்பட்ட அமித்ஷா, 1.41 மணிக்கு ஐ.டி.சி. ஹோட்டலுக்கு திரும்பினார்.

பின்னர் மதியம் 1:57 மணிக்கு அண்ணாமலை எல் முருகன் ஆகியோர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு கமலாலயம் புறப்பட்டுச் சென்றனர்.

மதியம் 2:49 மணிக்கு பாஜக தமிழக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் கமலாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் நயினார் நாகேந்திரன் தமிழக தலைவராவது உறுதி செய்யப்பட்டது.

நயினார் நாகேந்திரன் தலைவராவது உறுதியானதை தொடர்ந்து, கிரின்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மாலை 4.10 மணிக்கு கேபி முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் வந்தனர்.

பின்னர் தன்னுடைய சகாக்களுடன் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து ஐடிசி ஹோட்டலுக்கு புறப்பட்டார்.

மாலை 4:36 மணி அமித்ஷா எக்ஸ் தளத்தில் நயினார் நகேந்திரன் தமிழக தலைவராவதையும், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதையும் உறுதி செய்தார்

பின்னர் மாலை 5:00 மணி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அதன்பின்னர் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் கூட்டணியை உறுதி செய்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சுமார் 30 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு மாலை 5:55 மணிக்கு அமித்ஷா தேநீர் விருந்திற்காக எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு புறப்பட்டார்.

45 நிமிட தேநீர் விருந்திற்குபின் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து புறப்பட்ட அமித்ஷா தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்