ADMK | TVK | கடைசியில்.. குழப்பத்தில் 4 MLA-க்களை இழந்த அதிமுக - ரோலர் கோஸ்டரான TN அரசியல் களம்
அதிமுகவில் முடிவுக்கு வந்த குழப்பம் - ஒன்றுபட்ட 2 அணிகள் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அதிமுகவில் அரங்கேறிய அடுத்தடுத்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன... அதுபற்றி விரிவாக பார்க்கலாம்... 2026 சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ் - எஸ்பிவி தரப்பாக பிரிந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நடந்த தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவிஎஸ் - எஸ்பிவி தரப்பு 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஈபிஎஸ் தரப்பு 22 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்த சூழலில், சிவிஎஸ் - எஸ்பிவி தரப்பில் அங்கம் வகித்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் 25-ம் தேதியும் இசக்கி சுப்பையா 26-ம் தேதியும் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகினர். மறுபுறம், சி.வி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சிலர், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக அணி மாறியதும், அரசியல் களத்தில் கவனம் பெற்றது. இந்த உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எஸ்பி வேலுமணி தலைமையில் 10 எம்.எல்.ஏ-க்கள் ஈபிஎஸ்-ஐ சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவில் அதிகாரபூர்வமாக இணைந்தனர். இந்த சந்திப்பில் சி.வி. சண்முகம் கலந்துகொள்ளாத நிலையில், அவர் தங்கள் பக்கமே இருப்பதாக எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று 47 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த அதிமுக, கட்சியில் நிலவி வந்த குழப்பத்தால் 4 எம்.எல்.ஏ-க்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே காலியாக உள்ள திருச்சி கிழக்கு உட்பட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளையும் சேர்த்து 5 தொகுதிகளிலும் அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
