ஆபாச பேச்சும், ஆடி கார் வாழ்வும் - பப்ஜி மதன் கைது பின்னணி
பப்ஜி விளையாட்டை இணையத்தில் சட்டவிரோதமாக விபிஎன் முறையை பயன்படுத்தி விளையாடியதாகவும், அதை வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு போலீசில் கடந்த 14ஆம் தேதி புகார்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரித்து வந்தது. இதையடுத்து இணையம் சார்ந்த குற்றம் என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைமுக்கு கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. அன்றைய தினமே பப்ஜி மதன் மீது மேலும் ஒரு புகார் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்றைய தினமே மதன் சேலத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்த போலீசார், அங்கு விரைந்தனர்.
சேலத்தில் இருந்து மதன் தலைமறைவான நிலையில் அவரின் மனைவி கிருத்திகா மற்றும் மதனின் தந்தையை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதன் நடத்தி வந்த யூட்யூப் சேனல்களுக்கு கிருத்திகா தான் நிர்வாகி என்பதும், ஆபாசமாக மதனுடன் பேச்சை ஆரம்பித்து வைப்பது எல்லாம் கிருத்திகா தான் என்பதும் தெரியவந்தது. சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த மதன், சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஆடம்பரமான ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் இடத்தின் உரிமையாளருக்கு வாடகை தராமல் 2018 தப்பிச் சென்றதாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது வழக்கு ஒன்றும் உள்ளது. அதேநரம் ஓட்டல் தொழில் செய்வதாக கூறி வங்கியில் 5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்றோர் சம்மதிக்காததால் காதலியான கிருத்திகாவுடன் சென்ற மதன், அவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் மதனின் இந்த விளையாட்டுகள் கிருத்திகாவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணம் கொட்டுவதை பார்த்து ஒரு கட்டத்தில் கிருத்திகாவும் முழு ஆர்வத்துடன் இறங்கி உள்ளார். வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்காக விலை உயர்ந்த ஐ போன் நிறுவனத்தின் ஐ பேடுகள், 3 சிம்கார்டுகளை வாங்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளார் மதன். ஒரு கட்டத்தில் இவரின் ஆபாசமான பேச்சுகள் இளைஞர்களை கவரவே, பாலோயர்களின் எண்ணிக்கையும் 8 லட்சத்தை கடந்தது.
இதனை தக்க வைப்பதற்காக தடை செய்யப்பட்ட கொரிய விளையாட்டுகளையும் விளையாடி வந்துள்ளார் மதன். மாதம் 10 லட்சம் வரை வருமானம் வந்ததால் ஆடி கார், சென்னையில் அபார்ட்மெண்ட் வீடு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தன் வருமானத்தில் ஆதரவற்றோருக்கு உதவி செய்வதாகவும் கூறி ரசிகைகளிடம் பணம் வசூல் செய்ததும் அம்பலமாகியிருக்கிறது. இதற்காக தன்னுடைய கூகுள் பே நம்பரை கூட யூட்யூப் ஸ்க்ரீனில் பதிவிட்ட மதன், பணத்தை லட்சக்கணக்கில் சுருட்டி உள்ளதாக புகார்கள் உள்ளன. தன்னுடைய அடையாளத்தை எங்கும் காட்டக் கூடாது என்பதில் கவனமாக இருந்த மதன், சமீபத்தில் நடந்த இணைய விருது விழாவில் கூட தன் ரசிகர்களையே அனுப்பி இருந்தார்.
விசாரணைக்கு பிறகு கடந்த 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட கிருத்திகா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மனைவி கைதான பிறகும் கூட தலைமறைவாகவே இருந்து வந்தார் மதன். அவரின் முன்ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு மதனின் ஆபாச பேச்சுகளுக்கும் குட்டு வைத்தது. இதனிடையே தருமபுரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் கடந்த 2 நாட்களாக மதன் தங்கியிருந்தது தெரியவந்தது. அப்போது போலியான முகவரியை அவர் கொடுத்திருந்ததும் உறுதியானது. மதனை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இந்த விளையாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக விளையாடத் தொடங்கிய மதன் இதுவரை கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் பணம் சம்பாதித்துள்ளார். சம்பாதித்த பணத்தை எல்லாம் பிட்காயினில் முதலீடு செய்திருப்பதும் உறுதியான நிலையில் அவரின் வங்கிக்கணக்கு உள்ளிட்டவற்றை போலீசார் முடக்கி உள்ளனர்.
தன்னுடைய அடையாளத்தை மறைப்பதற்காக மதன் செய்த செயல்களும் ஏராளம். தன் வீட்டில் கிட்டத்தட்ட 20 வகையான விலை உயர்ந்த கூலிங்கிளாஸ்களை வாங்கி வைத்திருக்கும் அவர், எப்போது வெளியே சென்றாலும் அதை பயன்படுத்தி வந்துள்ளார். பல வருடங்களாக டெக்னாலஜியை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட விளையாட்டால் ஆட்டம் காட்டி வந்த மதன், சைபர் க்ரைம் டெக்னாலஜியால் 5 நாட்களில் சிக்கியிருக்கிறார்.
