மாரிதாசுக்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் மாரிதாஸை வரும் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் சைபர்கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்த யூடியுப்பரும் பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை பொது அமைதியை சீர்குலைத்தல், தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனையடுத்து மாரிதாஸ் மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மாரிதாஸ் உத்தமபாளையம் கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
