யூடியூபர்களுக்கு Youtube வைத்த செக்-3 நாளில் வரப்போகும் அதிரடி மாற்றம்-இனி ஈஸியா காசு பாக்க முடியாது
யூடியூபர்களுக்கு Youtube வைத்த செக் - 3 நாளில் வரப்போகும் அதிரடி மாற்றம்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
யூ டியூப் தனது உள்ளடக்க உருவாக்க கொள்கையை புதுப்பித்துள்ளது. இது வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்டென்ட் கிரியேட்டர்களிடையே வருமான இழப்பு
ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இது குறுகிய காலத்தில் புகழையும், வருமானத்தையும் அள்ளிக் கொடுப்பதால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் முளைத்து வருகின்றன.
அதே நேரம், வருமானத்தை ஈட்டுவதற்காக பல்வேறு நூதன யுக்திகளை பின்பற்றி காப்பி பேஸ்ட் வீடியோக்களையும், ரியாக்ஷன் வீடியோக்களையும் உருவாக்கி உலவ விடுவது பெருகிவிட்டது.
தவிர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும்
இணைய தளங்கள் மூலம் எந்தவொரு சிரமமுமின்றி, சில நிமிடங்களிலேயே வீடியோக்களை உருவாக்கியும் பலர் பதிவிடுகின்றனர்.
எனவே, மேற்கண்ட சிக்கல்களை களைந்து யூடியூப்பின் தரநிலையை பாதுகாக்கும் நோக்கத்துடன் தனது வருமானம்
ஈட்டும் Youtube Partner Program-கொள்கையில் விதிகளை
மேலும் கடுமையாக்கியுள்ளது.
பொதுவாக யூடியூப் சேனல்கள் வருமானம் ஈட்டுவதற்கு தகுதியாக ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ், ஓராண்டில் 4 ஆயிரம் மணி நேரம் வாட்ச் ஹவர்ஸ் அல்லது 3 மாதத்தில் 1 கோடி ஷார்ட்ஸ் வீடியோ பார்வைகளைப் பெற வேண்டும் என்ற விதி வழக்கத்தில் உள்ளது. இனி, இது மட்டுமே வருமானம் ஈட்டுவதற்கான தகுதியாக கருதப்படாது என்பது புதிய விதிகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ஒருவர் போட்ட வீடியோவுக்கு ரியாக்ஷன் வீடியோ உருவாக்கும்போதும், அதில் கிரியேட்டரின் முயற்சியும், பங்கும்
அதிகம் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீண்டும், மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்
பார்வைகள் பெறுவதைத் தாண்டி பொழுதுபோக்கு அல்லது
கல்வி சார்ந்ததாக இருந்தால் மட்டுமே வருமானம் கிடைக்குமாம்.
பல வீடியோக்களில் இருந்து தொகுக்கப்படும் காம்பிளேஷன் வீடியோக்கள், AI தொடர்பான வீடியோக்கள் உருவாக்கினால்,
அதில் கிரியேட்டரின் பங்கும் அதிகம் இருக்க வேண்டும்.
உதாரணமாக, AI பற்றிய வீடியோவை உருவாக்கும்போது, வீடியோவில் ஒரு சில AI புகைப்படம் அல்லது வீடியோவை குறைவான அளவு பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது.
மாறாக முழுக்கவே AI முறையில் வீடியோவை உருவாக்கினால் அதற்கு வருமானம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஷார்ட்ஸ் வீடியோக்களில் பாடல்கள் பயன்படுத்தினால், பாடல்களின் காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும்
அந்த வீடியோவின் மூலமாக கிடைக்கும் வருமானம் பகிரப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள்
தரம் குறைந்த வீடியோக்களுக்கு பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தத்தில், யூடியூபில் கிரியேட்டர்கள்
தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கும் வீடியோக்கள் மட்டுமே ப்ரொமொட் செய்யப்படும் என்பதை புதிய கட்டுப்பாடுகள் நோக்கமகாக் கொண்டுள்ளது.
நம்பகத்தன்மையற்ற உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்கள்
வெறுமனே வருமானம் ஈட்டும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுவதை தடுக்கவே விதிகள் கடுமையாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் புதிய விதிகளை சரியாக பின்பற்றாத யூடியூப் சேனல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி யூடியூப் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
