இளம்பெண்ணின் பகீர் வீடியோ தான் உயிர் பறிபோக காரணமா?
பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம் ஆண் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவால், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப நாட்களாக பேரூந்தில் பயணிக்கும் பெண்களிடம் ஆண்கள் சிலர் தகாத செயல்களில் ஈடுபடுவது போன்ற வீடியோக்களை பாதிக்கப்பட்ட பெண்களே தைரியமாக இணையத்தில் வெளியிடுவதை அதிகளவில் பார்த்து வருகிறோம்..
அந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும்பாலும் வைரலாகி விடுகின்றன. இதனால் அப்படிப்பட்ட பெண்களை சிங்கப்பெண்ணே! என்ற ஹாஷ் டாக்குடன் நெட்டிசன்கள் வொன்டர் வுமனாக உச்சாணிக்கொம்பில் உயர்த்தி விடுகின்றனர்.
அப்படித்தான் தற்போது வெளியாகி இருக்கிறது இந்த வீடியோ...கேரளா மாநிலம் கண்ணூர் வழித்தடத்தில் சென்ற ஒரு பேருந்தில் தான் இது நடந்திருக்கிறது...
பையனூர் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய ஒரு நபர் கைகளை அசைப்பது போல, பஸ்ஸில் பயணித்த பெண்களின் உடலில் உரசி அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இன்ஸ்டா பெண் பிரபலம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்....
அந்த நபர் தன்னிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இருந்தார் அந்த இன்ஸ்டா யுவராணி.
இந்த வீடியோவை வெளியிட்டவர் சோஷியல் மீடியாவில் பேமசான நபர் என்பதால் மின்னல் வேகத்தில் வைரலாகி இருக்கிறது. பெண்களுக்கு ஆதரவானவர்கள் அந்த பதிவில் கேரளா போலீசாரை Tag செய்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு கமெண்டுகளை பதிவிட்டனர். மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியதால் இளம்பெண்ணும் வடகரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் என்று தெரியவந்திருக்கிறது. இவர் கண்ணூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து விசாரிப்பதற்காக போலீசார் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தான் போலீசாருக்கு காத்திருந்தது மற்றொரு அதிர்ச்சி... தீபக் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.ஆம்... கடந்த 7 ஆண்டுகளாக இதே வழித்தடத்தில் பயணித்திருக்கிறார் தீபக். சம்பவம் நடந்த ஜனவரி 16 ஆம் தேதி அன்றும் தீபக் வேலைக்காக வழக்கம்போல சென்றுள்ளார்.
அதன்பிறகு தான் இவை அனைத்தும் நடத்திருக்கிறது. வீடியோ 20 லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. தீபக்கை தெரிந்த பலரும் அவருக்கு போன் செய்து நடந்ததை விசாரித்துள்ளனர். இது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது. இன்ஸ்டா பிரபலம் தன்னை ஒரு பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசாமி போல சித்தரித்து வீடியோ வெளியிட்டதை தீபக்கால் தாங்கி கொள்ள முடியவில்லை.
இதனால் அவமானம் தாங்காமல் இந்த விபரீத முடிவை தீபக் எடுத்துள்ளதாக தீபக்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபக் வேண்டும் என்றே பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை என்றும் தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் சோஷியல் மீடியாவில் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் இதுபோன்ற போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்களின் இந்த சரமாரி கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த இளம்பெண் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.தீபக் வேண்டும் என்றே இதை செய்ததாகவும், இவரை போன்றவர்களின் மனநிலையை வெளியுலகிற்கு காட்சிப்படுத்தவே வீடியோ வெளியிட்டேன் எனவும், லைக்குக்காக இதை செய்யவில்லை எனவும் அந்த பெண் தெளிவுபடுத்தி உள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்தியது தான் தீபக்கின் மரணத்திற்கு காரணம் எனக் கூறியும், அந்த இளம் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீபக்கின் குடும்பத்தினர் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ள நிலையில் மனித உரிமை ஆணையம் இதனை கையில் எடுத்திருக்கிறது. இது குறித்து விசாரித்து ஆணையத்தின் உறுப்பினர் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
