சபரிமலைக்குசெல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை

x

கேரளாவில் பரவி வரும் அமீபா மூளை காய்ச்சல் எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள், நீர்நிலைகளில் நீராட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் தீவிர முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சபரிமலையில் மகர விளக்கு சீசனுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாநில சுகாதாரத்துறை முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால், மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை உள்ளதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவசர மருத்துவ உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்