Puducherry | நாளை வாக்குப்பதிவு - உச்சகட்ட பரபரப்பில் புதுவை, கேரளம், அசாம்
நாளை வாக்குப்பதிவு - உச்சகட்ட பரபரப்பில் புதுவை, கேரளம், அசாம் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30- தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7- மணிக்கு தொடங்கி மாலை 6-மணியுடன் நிறைவடைகிறது. 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் 1099 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது இதில் 207 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. 30 வாக்குச்சாவடிகள் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள், 2,800 காவல்துறையினர் மற்றும் 2,200 மாணவர் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.8.4 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் மொத்தம் 9,50,637 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுவரை 12,591 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. நாளை நடைபெறவுள்ள தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
