துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள, சட்டத் திருத்தம், வினாயகர் தாமோதர் சாவர்க்கரின், சிந்து நதியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகள் ஒரே நாடு என்ற கொள்கையை அவமதிப்பதாக உள்ளது என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சனை மற்றும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த தோல்விகளை மறைக்கவும், மக்களை திசை திருப்பவுமே இந்த குடியுரிமை சட்டத்திருத்தம் தற்போது செய்யப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கின்றது என பார்ப்போம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.