ரகசியமாக லிவ்-இன் உறவில் இருந்தால் இனி தப்ப முடியாது - ஜெயில் கன்பார்ம் -அடியோடு மாற்றப்பட்ட சட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலுக்கு வந்திருக்கும் பொது சிவில் சட்டத்தால், திருமணம், விவாகரத்து போன்ற விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன.
ஆனால்... அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய வாக்குறுதி...
இந்த சூழலில் பாஜக ஆளும் உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா 2024 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். சட்டம் 2025 ஜனவரி 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது
இதனால் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகளில் விதிகள் மாறியிருக்கிறது.
ஆணுக்கு திருமண வயது 21 என்றும் பெண்ணுக்கு 18 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீறினால் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
திருமணம் செய்து கொண்ட 60 நாளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.
தவறான தகவல்களை கொடுத்தால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.
ஹலால், இத்தா மற்றும் முத்தலாக் போன்ற இஸ்லாமிய நடைமுறைகளை குற்றம் என உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் கூறுகிறது.
விதிகளை மீறினால் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கலாம், அபராதம் விதிக்கலாம்.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள முடியாது, அப்படி செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் கட்டாயம் ஒரு மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற வேண்டும்.
லிவ்-இன் உறவில் இருப்பதை பதிவு செய்யவில்லை என்றால் 3 மாதங்கள் சிறை தண்டணை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிரிவில் இடம்பெறும் லிவ்-இன் உறவில், திருமணம் செய்த ஆணோ, பெண்ணோ இருக்க முடியாது.
லிவ்-இன் உறவில் பிறக்கும் குழந்தைகள்... தாய், தந்தையிடம் அனைத்து சட்ட உரிமைகளையும் பெற முடியும். லிவ் இன் உறவில் இருந்து வெளியே வரும்போதும் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மீண்டும் வேறு ஒருவரோடு புதிய லிவ்-இன் உறவில் சேரும் போதும் பதிவு செய்ய வேண்டும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள ஒரு பெண்ணை ஒரு ஆண் கைவிட்டுவிட்டால், விசாரணை அதிகாரி சொல்லும் பராமரிப்பு தொகையை வழங்க வேண்டும்.
பொதுவாக மகன்கள் மற்றும் மகள்கள் இருவருக்கும் தந்தை சொத்தில் சம உரிமை உள்ளது. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தந்தையின் சொத்தில் சம உரிமை பெறுவார்கள் என சட்டம் சொல்கிறது.
அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை தவிர்த்து மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
பொதுசிவில் சட்டம் விமர்சிக்கப்படும் வேளையில், அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 44, அதை அனுமதிக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியும் பொது சிவில் சட்டம் வேண்டும் என அழுத்தமாக கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
