Super Elnino| உலகையே மிரளவிடும் எல்நினோவையே தூக்கி சாப்பிட்ட இந்தியா.. என்ன இந்த அடி அடிக்குது..!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகப் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழையானது கொட்டி தீர்த்து வரும் நிலையில், நாசிக் மற்றும் திரியம்பகேஸ்வர் பகுதிகளில் மிகக் கடுமையான கனமழை பெய்து வருவதால் அங்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மழையின் காரணமாக கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது. ஒடிசாவின் பலாங்கிர் மாவட்டத்தில் உள்ள லந்த் (Lanth) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 6 கால்நடை மேய்ப்பாளர்களும், சுமார் 120 கால்நடைகளும் சிக்கித் தவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் அவசரக்கால மீட்புக்குழுவினர் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். தலைநகர் டெல்லியின் சாந்தி பாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியுள்ளது. அண்டை மாநிலமான ஹரியானாவின் குருகிராம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் கடுமையான தண்ணீர் தேங்கி, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டார் 62-ல் உள்ள லேபர் சவுக் பகுதியிலும் கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆன்மீகத் தலமான உத்தரகாண்டின் ஹரித்துவார் பகுதியில் பெய்த கனமழையால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் பெய்த கனமழையால், வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளத்தில் தத்தளித்தன. கர்நாடகாவில் பெய்த கனமழையால் பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
