பாலியல் தொல்லை - தீக்குளித்த மாணவி உயிரிழப்பு
ஒடிசாவில் பாலியல் தொல்லைக்கு ஆளானதால் தீக்குளித்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில் உள்ள ஃபகிர் மோகன் கல்லூரியில் படித்த மாணவிக்கு, துறையின் தலைவர் சமீர் சாஹூ பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இருப்பினும், உரிய விசாரணை நடத்தப்படாத நிலையில், அந்த மாணவி, தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் மோகன் சரன் மாஜி, பாலியல் புகாரில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதற்கிடையே, மாணவியின் தீக்குளிப்புக்குப் பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர் திலீப் கோஷே, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
