

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 8 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முடக்கப்பட்ட சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ளது.
சுமார் 22 ஆயிரத்து 585 புள்ளி 83 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற தொழிலதிபர்கள் விஜய் மல்லையா , நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் ஏற்கெனவே முடக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 18 ஆயிரத்து 170 கோடி ரூபாய் ஆகும். முறைகேடு நடந்த தொகையில் இது 80.45 சதவீதம் ஆகும். மூவரும் கடன் வாங்கி ஏமாற்றிய வங்கிகளின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முடக்கி வைத்துள்ள சொத்துக்களை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றம் செய்து வருகின்றது. அந்த வகையில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் 8 ஆயிரத்து 841 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளிடம் அமலாக்கத் துறை தற்போது ஒப்படைத்துள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 41 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத் துறை வங்கிகளிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்துள்ளது. இது மூவரும் முறைகேடு செய்த பணத்தில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.