ஹை-செக்யூரிட்டி பங்களாவுக்குள் கொடூரன் நுழைந்தது எப்படி? - சைஃப் அலிகான் வீட்டுக்குள் கருப்பு ஆடு?

x

மும்பையில் வீடு புகுந்து பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு

எங்காவது சிசிடிவி உள்ளதா? என செக் செய்துக்கொண்டே படியில் கீழே இறங்கும் இவன்தான் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவன் என தெரிவித்துள்ளது மும்பை போலீஸ்...

சைஃப் அலிகான் கத்தியால் குத்திய சம்பவம் பாலிவுட்டையே பரபரக்க செய்திருக்கிறது. பாதுகாப்பு நிறைந்த பாந்திரா பங்களாவிலேயா? இப்படி என பலரையும் மிரட்சியடைய செய்துள்ளது. சைஃப் அலிகானின் 'சத்குரு ஷரன்' சொகுசு பங்களா, மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், ரேகா, அமீர்கான், சல்மான் கான் வீடும் உள்ளது.

பங்களாவில் 12 ஆவது மாடியில் உள்ள சைஃப் அலிகான் வீட்டுக்கு சென்ற கொள்ளையன், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். நள்ளிரவு 2 மணியளவில் சைஃப் அலிகான் குழந்தை தூங்கிய அறைக்கு கொள்ளையன் வந்ததாகவும், தன்னிடம் கத்தியை காட்டி ரூபாய் ஒரு கோடியை கொடு என மிரட்டியதாகவும் பணிப்பெண் எலியாமா பிலிப் போலீசில் தெரிவித்துள்ளார்.

கொள்ளையனை தடுக்க முயன்ற போது அவன் தன்னை தாக்கியதாகவும், அப்போது மற்றொரு பணிப்பெண் ஜானுவும் போராடியதாகவும், தங்கள் சத்தம் கேட்டு அறைக்கு சைஃப் அலிகான் வந்ததாக எலியாமா பிலிப் தெரிவித்துள்ளார்.

கொள்ளையன் கத்தி வைத்திருந்த போது... குடும்பத்தை காக்க கையில் ஆயுதம் எதுவும் இல்லாது அவனுடன் சண்டையிட்டுள்ளார் சைஃப் அலிகான்... கொள்ளையன் சரமாரியாக கத்தியால் குத்த சைஃப் அலிகான் கழுத்து, முதுகு தண்டு, மணிக்கட்டு என 6 இடங்களில் கத்திக் குத்து விழுந்ததுள்ளது.

சத்தம் கேட்டு கூடுதல் பணியாளர்கள் வர வேகமாக ஓட்டம் பிடித்துள்ளான் கொள்ளையன்... அப்படி இறங்கிய போது நள்ளிரவு 2:33 மணியளவில் 6 ஆவது மாடியில் இருந்த சிசிடிவி காட்சியில் மட்டுமே கொள்ளையன் சிக்கினான் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையே சைஃப் அலிகான் மகன் இப்ராகிம் அலிகானுக்கு தகவல் தெரிந்ததும், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரத்தம் சிந்திய நிலையில் போராடிய சைஃப் அலிகானை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சைஃப் அலிகானின் ஆட்டோமெட்டிக் காரை எடுப்பதற்கு டிரைவர் இல்லாத வேளையில், தொடர்ந்து தாமதம் ஏற்படுவதை தவிர்க்க இப்ராகிம், தந்தையை ஆட்டோவில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சைஃப் அலிகானுக்கு முதுகு தண்டுவடம் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கத்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதனையடுத்து ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பங்களாவில் கட்டிடத்தில் அவசரகாலத்தில் வெளியேறும் வாயில் வழியாக கொள்ளையன் மாடிக்கு சென்றது தெரியவந்துள்ளது. நீண்ட நேரமாக கொள்ளையன் சைஃப் அலிகான் வீட்டில் பதுங்கி இருந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் கொள்ளையன் பாதுகாவலர் கண்காணிப்பு, சிசிடிவி காட்சிகளை தாண்டி 12 ஆவது மாடிக்கு சென்றது எப்படி? உள்ளே இருந்த யாராவது கொள்ளையனுக்கு உதவினார்களா? என பல கேள்விகள் எழுந்துள்ளது. இதே கேள்வியோடு பல கோணங்களில் விசாரிக்கும் மும்பை போலீஸ், 20 தனிப்படைகளை அமைத்து கொள்ளையனை தேடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்