

கடுமையான விரதம் இருக்கும் பக்தர்கள், ஐயப்பனை தரிசனம் செய்ய பெரிய பாதையை தேர்ந்தெடுத்தால் எருமேலியில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரமும், சிறிய பாதையை தேர்ந்தெடுத்தால் பம்பையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரமும் கால்நடையாக பயணிக்க வேண்டும்.
பெரும்பாலும், பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களில் வெளிமாநில பக்தர்கள் வந்து, திரும்புகின்றனர். சபரிமலைக்கு ரயில் மார்க்கமாக செல்ல விரும்பினால் திருவனந்தபுரத்துக்கும் கோட்டயத்துக்கும் இடையில் உள்ள செங்கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்தே செல்ல வேண்டும். ஆனால், செங்கண்ணூர்-பம்பை இடையேயான தூரம் 90 கிலோ மீட்டர் ஆகும்.
அங்கமலை- சபரிமலை ரயில்வே திட்டத்தை 1997 ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே அறிவித்தது. அங்கமலையில் இருந்து அழுதா வரை ரயில்பாதை அமைக்கும் இந்த திட்டத்திற்கான நிதியில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விரதம் இருந்து நீண்ட பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் எளிதாக எருமேலிக்கு சென்றடைய முடியும்.
இந்த திட்டத்திற்காக 2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 225 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதைய மதிப்பின் படி, அங்கமலை- சபரிமலை ரயில்வே திட்டத்தை செயல்படுத்த 550 கோடி ரூபாய் தேவைப்பட்டது. ஆனால், இப்போது, 2 ஆயிரத்து 815 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
116 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சபரிமலை ரயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு 22 ஆண்டு ஆகியும், இது வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட பாதை அமைக்கும் பணி நடைபெறவில்லை என்று அய்யப்ப பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு சபரிமலை ரயில்வே திட்டத்தை செயல்படுத்தினால் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் பெறுவார்கள்.
எனவே, அங்கமலை- சபரிமலை ரயில்வே திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.