அக்டோபர் 31க்குள்.. அறிக்கை விட்ட ஆளுநர்
அக்டோபர் 31ம் தேதிக்குள் 10 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் உயர்கல்வியின் தரம் மற்று தரநிலைகளை மேம்படுத்துவதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகவும், அனைத்து பட்டமளிப்பு விழாக்களும் குறித்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்1ம் தேதி முதல் இந்தாண்டு ஜுலை 31ம் தேதி வரை, 20 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 18 பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், துணைவேந்தர் பதவி காலியாக உள்ள பல்கலைக்கழகங்களில், பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்குமாறு துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அதாவது அக்டோபர் 31ம் தேதிக்குள், 10 பல்கலைக் கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
