ஒரு நாள் கூட முழுமையாக நீடிக்காத RCB-ன் வெற்றி கொண்டாட்டம் - ஆறா வடுவாய் மாறிய துக்கம்
ஒரு நாள் கூட முழுமையாக நீடிக்காத RCB-ன் வெற்றி கொண்டாட்டம் - 18 வருட ஏக்கம்... ஆறா வடுவாய் மாறிய துக்கம்
ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இந்த கோர நிகழ்வு பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி...
ஆனால் அந்த கொண்டாட்டம் 1 நாள் கூட முழுமையாக நீடிக்கவில்லை...
11 உயிர்கள் பலியான சம்பவம் கோப்பையில் ரத்தக்கறையாய் படிந்து விட்டது...
கர்நாடக மக்கள் மனங்களிலும் ஆறாத வடுவாகி விட்டது...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி முத்தமிட்டபோது ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை...
இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டது...
விராட்கோலியையும், ஆர்.சி.பி வீரர்களையும் காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்...
பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் விதான் சவுதா வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்...
ஆனால் கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது...
நேரம் ஆக ஆக கூட்ட நெரிசல் கண்முன் தெரியாமல் அதிகரிக்கவே...
வெறும் 34 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே உள்ள அரங்கினுள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கூடினர்...
அனுமதிச்சீட்டு வைத்திருந்தவர்கள்...இல்லாதவர்கள்..என அனைவரும் போட்டி போட்டு உள்ளே நுழைய முயலவே...நுழைவு வாயில்களில் கதவுகள் உடைபட்டன...
ஒருவர் மீது ஒருவர் ஏறி..முண்டியடித்துச் சென்றதில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்...
ஆனால் ஆர்.சி.பி வீரர்களைப் பார்க்கும் ஆவலில்...கீழே விழுந்து கிடப்போரைப் பற்றி கொஞ்சமும் இரக்கமின்றி அவர்கள் மேல் ஏறி மிதித்து உள்ளே நுழைந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது...
விளைவு...11 உயிர்கள் பறிபோயுள்ளன...பலர் படுகாயமடைந்துள்ளனர்...
இந்த கோர சம்பவம் குறித்து ஆர்.சி.பி நிர்வாகம், கர்நாடக அரசு வருத்தம் தெரிவித்த நிலையில்...
ஆளும் காங்கிரஸ் அரசின் கவன குறைவே காரணம் என பாஜக குற்றம் சாட்டியது...
ஆனால், பாஜக பிணங்களை வைத்து அரசியல் செய்வதாக கண்டித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்,
இதுபோன்ற தூண்டுதல்களுக்கு அவர்கள் தான் சூத்திரதாரிகள் எனவும் விமர்சித்தார்...
இதுகுறித்து ஆர்.சி.பி., கே.எஸ்.சி.ஏ. நிர்வாகத்தினரை சந்தித்து பேச உள்ளதாகவும், தவறு எங்கு நடந்தது என்பது குறித்து டிஜிபி மற்றும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தி வருவதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா விளக்கம் அளித்துள்ளார்...
அத்துடன் மெட்ரோ அதிகாரிகள் அளித்த தகவலின்படி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை 8.7 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்ததாகவும், இது வழக்கத்தை காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கு எனவும் சுட்டிக்காட்டினார்...
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து...அறிக்கையாக 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என பெங்களூரு நகர ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
மிகப்பெரிய வெற்றிக் கொண்டாட்டமாய் மாறியிருக்க வேண்டிய நிகழ்வு...அழுகுரல்களுடன் அலங்கோலமாய் மாறியது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...
