

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தின் முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்த அழைப்பை விடுத்துள்ளார். 125 ஆண்டுக்கால வரலாற்றில் இந்திய தொழில் கூட்டமைப்பு பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், கொரோனாவால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையில் இருந்து நாடு மீண்டும் மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் மீது தமக்கு அதிக நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர், அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பான துறைகள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விவசாயிகள் தாங்கள் விரும்பும் இடத்தில் விளைபொருட்களை விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆன்லைன் மூலமாகவும் விளை பொருட்களை விற்க அரசு உதவி செய்யும் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளதாகவும், 74 கோடி பேருக்கு உணவு தானியம் அரசு வழங்கி உள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சுயசார்பு பாரதம் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தோடு ஒருங்கிணைந்து இருப்பது மட்டுமின்றி ஆதரவாகவும் இருப்பது என்றும் குறிப்பிட்ட பிரதமர், பாரதத்தை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க அறைகூவல் விடுத்துள்ளார்.