பார்க்கிங் பிரச்சினை - ஒரு ஊரே மோதிக் கொண்டதால் பரபரப்பு
பைக் நிறுத்தும் விவகாரம் தொடர்பாக இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு ஊரே சேர்ந்து சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் அரங்கேரி உள்ளது.
பாகல் கோட்டை நகரின் ஓசப்பேட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த மற்றொரு இளைஞர் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருவரும் தங்களுக்கு தெரிந்த நபர்களை அழைக்க தொடங்கினர். இரண்டு பேரிடையே தொடங்கிய வாக்குவாதம், அந்த ஊரில் உள்ளவர்களை இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு கொண்டு சென்றது. வாகன பார்க்கிங் பிரச்சனையால் ஒரு ஊரே மோதிக்கொண்ட சம்பவத்தில் இரண்டு குழுக்களையும் சேர்ந்த ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் பகுதியில் இருந்த சிசி டிவியை ஆய்வு செய்தபோது, இரண்டு குழுவினரும் கொடூரமாக தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதில் பதிவாகி இருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனுடைய இரண்டு குழுவினர் கொடூரமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது.
