

ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது ஆகியவையே டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. காகிதமற்ற பணபரிமாற்றத்தை முன்னெடுத்து செல்லும் டிஜிட்டல் இந்தியா திட்டமும் இதற்கு மற்றொரு காரணமாகும். செல்போன் மற்றும் கணினி மூலமான பணபரிமாற்றம் அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் முறை பணப்பரிமாற்றம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேடிஎம், கூகுள்பே,அமேசான் பே உள்ளிட்ட செயலிகள் மூலமான பரிவர்த்தனை எளிதாக இருப்பதால் அவற்றை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஸ்மார்ட் போன்கள் மூலமான பணபரிவத்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் பாதுகாப்பு வளையம் உடைக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்வதாக துறைசார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டில் 78 சதவீத இந்திய நிறுவனங்கள் மீது இணையதள தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், அதில் 28 சதவீதம் வங்கித்துறை நிறுவனங்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பணத்தை கையாள்வதில் செலவு எதுவும் இருக்காது என்று பொதுவான கருத்து நிலவிவரும் நிலையில், அதன் மூலம் வங்கித்துறைக்கு ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.