மைசூரு தசரா திருவிழா - விறு விறு விமான சாகசம்

மைசூரு தசரா திருவிழா - விறு விறு விமான சாகசம்

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா திருவிழாவையொட்டி, இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற 'சூர்யகிரண்' சாகசக் குழுவினரின் விமான சாகச கண்காட்சி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. மைசூரு பன்னிமண்டபம் மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் அதிநவீன ஹாக் போர் விமானங்கள் வானில் அணிவகுத்து நின்றன. தலைசிறந்த விமானப் படை வீரர்கள் வான்வெளியில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். விமானங்கள் விண்வெளியில் சீறிப்பாய்ந்து, சில விநாடிகளில் வெவ்வேறு வடிவங்களை உருவாக்கியதுடன், நமது தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் மூன்று வர்ண புகைகளை வானில் கக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த வான்வழி சாகசத்தைக் காண மைசூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை முதலே மைதானத்தில் குவிந்திருந்தனர்.கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிகழ்ச்சிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதிலும், இன்றைய நிகழ்வு எந்தவித தடையுமின்றி வெற்றிகரமாக நடைபெற்று தசரா கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது. தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஜம்பூ சவாரி நடைபெற உள்ள நிலையில், இன்றைய ஏர் ஷோ நிகழ்ச்சி பொதுமக்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com