ஓபனாகவே மிரட்டும் டிரம்ப்.. பதவியேற்புக்கு பின் இந்தியாவில் ஏற்பட போகும் தாக்கங்கள்
டிரம்ப் 2.0 அரசாங்கத்தில் இந்திய விவகாரங்களில் ஏற்பட போகும் தாக்கங்கள் என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
பைடன் அரசுடன் அனைத்து நிலைகளிலும் நல்ல நட்புறவையே கொண்டிருந்தது இந்தியா.
கடைசியில் சில கசப்புகள் வெளிப்பட்டாலும், வர்த்தகம் - பாதுகாப்பு உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் அது எதிரொலிக்கவில்லை.
இப்போது அமெரிக்காவே முதன்மை அதாவது வேலைவாய்ப்பு, தயாரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்க, அமெரிக்கர்கள் நலனுக்கே முன்னுரிமை என்ற தனது வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க போவதாக தெரிவிக்கிறார் டிரம்ப்.
டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான நட்புறவு முந்தைய ஆட்சியில், "ஹௌடி, மோடி" மற்றும் "நமஸ்தே டிரம்ப்" நிகழ்ச்சிகளில் எல்லோரும் அறிந்த ஒன்றே...
அமெரிக்காவை பொருத்தவரையில் பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்கிய strategic கூட்டாளி. இப்போது டிரம்ப் வருகை, வர்த்தகம், குடியேற்றம், ராணுவ ஒத்துழைப்பு, ராஜ்ய உறவுகளில் பல முக்கிய வாய்ப்புகளையும் மற்றும் சவால்களையுமே கொண்டிருக்கும் என்பதே வல்லுநர்கள் பார்வை.
ஏற்கனவே டிரம்ப் அதிபராக இருந்த போது பாரிஸ் காலநிலை உடன்படிக்கை மற்றும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறியது அமெரிக்கா.
இப்போது அவரது 2.0 ஆட்சியிலும் இத்தகைய கொள்கைகள் இந்தியா உட்பட பாரம்பரிய அமெரிக்க கூட்டணிகள் மற்றும் ஒப்பந்தங்களை சீர்குலைக்கலாம்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கும் வரியை உயர்த்துவேன் என்று ஏற்கனவே டிரம்ப் தனது வாயால் ஒப்பனாக சொல்லிவிட்டார். அப்படி டிரம்ப் நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க சந்தையை மையமாக கொண்ட இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் ஜவுளித்துறையில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
அதே நேரம், வர்த்தகத்தில் சீனாவிலிருந்து விலக துடிக்கும் டிரம்பின் முயற்சி, இந்தியா தன்னை ஒரு உற்பத்தி மையமாக நிலைநிறுத்திக் கொள்ள வழியையும் ஏற்படுத்தும்.
எச்1-பி விசா கொள்கையில் டிரம்ப் கரிசனம் காட்டினாலும், குடியேற்றம் விவகாரத்தில் டிரம்ப் நடவடிக்கை கடினமானதாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 7,50,000 சட்டவிரோத குடியேறிகள் உள்ளனர் என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பினால் அது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.
சீனாவை எதிர்கொள்ளும் வகையில், இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான ஆயுத விற்பனை, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சிகளுடன் மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் வர்த்தக வரிவிதிப்பு அச்சுறுத்தல்களை பல நாடுகள் பதற்றமாக பார்த்தாலும், இந்தியா அப்படியொரு கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இருப்பினும், டிரம்பின் செயல்பாடுகளை கணிப்பது கடினம் சென்ற சூழலில், டிரம்ப் 2.0 எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பே அதிகரித்திருக்கிறது.
