

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மஹாட் நகரின் கஜல்புரா பகுதியில் உள்ள ஒரு 5 அடுக்கு மாடி குடியிருப்பு நேற்றிரவு 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள 80க்கும் மேற்பட்டோரை காப்பாற்ற தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மும்பையிலிருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குனரிடம் தொலைபேசி மூலம் பேசி, வேண்டிய உதவிகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இடிபாடுகளில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்பாக அமித்ஷா தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.