Madurai Collector| கண்முன்னே வந்து நின்ற மதுரை கலெக்டர்.. நீதிபதிகள் சொன்ன `ஒரு’ வார்த்தை

Madurai Collector| கண்முன்னே வந்து நின்ற மதுரை கலெக்டர்.. நீதிபதிகள் சொன்ன `ஒரு’ வார்த்தை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜரான நிலையில், உத்தரவுகளை நிறைவேற்றாமல் அதிகாரிகள் செயல்படுவது வேதனை அளிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அட்டப்பட்டி ஊராட்சியில் 2020-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தில் நிதி முறைகேடு செய்யப்பட்டதாக கூறி, அட்டப்பட்டி கோவில்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்தப் புகார் மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை முன்னாள் ஆட்சியர்கள் சங்கீதா, பிரவீன்குமார், தற்போதைய ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் சிவகங்கை ஆட்சியர் ஆகாஷ் ஆகிய 4 பேரும் நேரில் ஆஜராகினர். அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டனர். குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் இருப்பவர்கள் திட்டங்களை நிறைவேற்றுவதிலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

X