அன்றாடங்காச்சி பெயரில் ரூ.30 கோடிக்கு சுகபோக சொத்து
கர்நாடகாவில் தினக்கூலி ஊழியருக்கு ரூ.30 கோடி சொத்து
கர்நாடகாவில், அரசின் கிராம வளர்ச்சித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய ஒருவர் 30 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பள் மாவட்டத்தில் பணியாற்றிய முன்னாள் ஒப்பந்த ஊழியர் கலகப்ப நிடகுந்தி என்பவரது வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவருக்கு சொந்தமாக 24 வீடுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், 350 கிராம் தங்கம், ரொக்கப் பணம், 2 கார்கள், 2 பைக்குகள், 50 ஏக்கர் நிலம் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நிரந்தரமான பதவியில் இல்லாத இவர், எவ்வாறு கோடீஸ்வரராக மாறினார் என்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, கலகப்ப நிடகுந்தி மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
