குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
Published on

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.

இதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்கு சென்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா, நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று தெரிவித்தார். ஆனால், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், இதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர், 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம், இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை கிடைக்கும்.

X

Thanthi TV
www.thanthitv.com