கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு

கேரளா கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தொடரும் கனமழை - உயிரிழப்பு 37ஆக அதிகரிப்பு
Published on

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இடுக்கி, வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை தற்போது 37 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 73 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவின் பல மாவட்டங்களில் அதிகபட்ச மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதிக பட்ச எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆகஸ்ட் 12 வரை ரெட் அலர்ட்டும், அதன் பின்பு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் என்பது வானிலை குறித்த அதிகபட்ச எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

செருதோணி அணையிலிருந்து வினாடிக்கு 8.5 லட்சம் லிட்டர் வெளியேற்றம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, இடுக்கியில் உள்ள செருதோணி அணையில் இருந்து வினாடிக்கு எட்டரை லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதால், நேற்று மதியம் முதல்முறையாக 5 மதகுகள் திறக்கப்பட்டன. வினாடிக்கு எட்டரை லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஒன்றரை லட்சம் நீர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அணைக்கு படிப்படியாக நீர் வரத்து குறையும் போது, நீர் வெளியேற்றப்படுவது குறைக்கப்படும் என, கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்துள்ளார்.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயநாடு

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வயநாடு அருகே உள்ள பனமரம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் முக்கிய சாலையான பத்தேரி, பனமரம் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய எதிர்க்கட்சி தவைரையும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்துச் சென்றார்

ஆலுவாவில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் சந்திரசேகரன், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் முதல்வருடன் சென்றிருந்தனர். முகாம்களில் செய்துள்ள வசதிகள் குறித்து அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் ஆலுவாவில் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com