சாதா காய்ச்சலில் தொடங்கி ரத்தம் குடிக்கும் மர்ம நோய்.. 17 மரணம்.. குவியும் பிணங்கள்..பல வீடுகள் சீல்

சாதா காய்ச்சலில் தொடங்கி ரத்தம் குடிக்கும் மர்ம நோய்.. 17 மரணம்.. குவியும் பிணங்கள்..பல வீடுகள் சீல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரியில் லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே மக்கள் மரண பீதியோடு மருத்துவமனைகளை நாடுவது அதிகரித்துள்ளது.

அவர்களுடைய அச்சத்திற்கு காரணம்... அங்கு மர்ம நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பதாகவே இருக்கிறது. ஆம்... ராஜோரியில் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி புதால் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் மர்மமான முறையில் இறந்தனர். தொடர்ந்து இதுபோல் 3 குடும்பங்களில் இறப்புகள் பதிவாக அங்கு மர்மமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அச்சமூட்டும் நிகழ்வாக அவர்களுக்கு ஏற்பட்டது என்ன நோய் என்பது தெரியவில்லை. மத்திய குழு சென்றுள்ள வேளையில், காஷ்மீர் அரசாங்கமும், ராணுவமும் மருத்துவ முகாம்களை அமைத்து மக்களுக்கு பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்தவர்களுக்கு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் ஆய்வுக்கு சென்ற மாதிரிகளில் நச்சுகள் கண்டறியப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களின் வீடுகளை சீல் வைத்து, மரணங்களை பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

உயிரிழந்தவர்களுக்கு பெரும்பாலும் முதலில் காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்து உள்ளனர். உயிரிழந்த அனைவருக்கும் பொதுவாக மூளை வீக்கம் இருந்ததாக ராஜோரி மருத்துவமனை மருத்துவர் ஏ.எஸ். பாத்தியா தெரிவித்துள்ளார்.

மாதிரிகள் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது நியூரோடாக்சின்கள் பாதிப்பு அவர்களுக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டார். நியூரோடாக்சின்கள் என்பது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய நச்சுப்பொருள். இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளில் சமிக்ஞைகளை கடத்தும் நரம்பு செல்களை சீர்குலைக்கும் போது விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் காஷ்மீரில் என்ன பாதிப்பு? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்றம் தொடர்ந்து நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com