சமோசா, ஜிலேபி சாப்பிட்டால் ஆபத்தா? கதிகலங்கவிட்ட தகவல் | மத்திய அரசு சொன்னது இதான்

x

ஆபத்தான உணவுகள் பட்டியலில் சமோசா, ஜிலேபி - மறுப்பு

சமோசா, ஜிலேபி விற்பனை பாக்கெட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை எந்த எச்சரிக்கையையும் விடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் உடல் பருமன் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனங்களில் இருக்கும் கேண்டீன்களில் உணவு பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவை பட்டியலிட்டு அறிவிப்பு பலகையை வைக்க மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டது. ஆனால், சமோசா, ஜிலேபியை ஆபத்தான உணவு பட்டியலில் மத்திய அரசு சேர்க்க இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது. சிகரெட் பாக்கெட்களில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல இனி சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்களிலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்யப்படும் எனவும் தகவல்கள் பரவின.

ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் விளக்கம் அளித்துள்ளது. சமோசா, ஜிலேபி போன்ற உணவு பாக்கெட்களில் எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்ற சுகாதாரத்துறை எந்த எச்சரிக்கையும் வெளியிடவில்லை என பிஐபி PIB தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை, எந்தவொரு உணவு பொருளையும் குறிப்பிடாமல், அனைத்து உணவுப் பொருட்களிலும் மறைந்திருக்கும் கொழுப்பு மற்றும் அதிகப்படியான சர்க்கரை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுவான அறிவுரையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பணியிடங்களில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதற்கு பொதுவான அறிவுரையை வழங்கியதாகவும் தெரிவித்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்