

மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிராக சர்வதேச அளவில் கூட்டுச்சதி நடைபெற்றுள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது வைக்கப்பட்ட உளவு குற்றச்சாட்டு காரணமாக, அவர் கடந்த 1994-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து நம்பி நாராயணன் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நம்பி நாராயணனுக்கு எதிராக சர்வதேச அளவில் கூட்டுச்சதி நடைபெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.