Indigo Issue | விசாரணைக்கு பின் இண்டிகோ நிறுவனத்துக்கு விழுந்த அடி
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.22.20 கோடி அபராதம்
இண்டிகோ நிறுவனத்தில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்துக்கு 22 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முறையான திட்டமிடல் இன்றி பணியாளர்களுக்கான பணிநேரத்தை இண்டிகோ நிறுவனம் மாற்றியமைத்ததால், கடந்த மாதம் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.
அதிலும் குறிப்பாக கடந்த டிசம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரையிலான 3 நாட்களில் 2,507 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், 1,852 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாலும் பயணிகள் விமான நிலையத்தில் பரிதவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
இதைத் தீவிரமாக கருதிய விமான போக்குவரத்து இயக்குநரகம், விசாரணை நடத்தி இண்டிகோ நிறுவனத்துக்கு 22 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்க்கும் வகையில், 50 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த உத்தரவுக்கு இணங்க, வரும் காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் உறுதியளித்துள்ளது
