இந்தியா வெளியிட்ட `லிஸ்ட்’ - ஒட்டு மொத்த வெறியையும் சேர்த்து இறக்கிய முப்படைகள்

x

இந்தியா வெளியிட்ட `அட்டாக் லிஸ்ட்’ - ஒட்டு மொத்த வெறியையும் சேர்த்து இறக்கிய முப்படைகள்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எந்தெந்த பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதன்படி, பஹவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையிடமாக செயல்படும் மர்கஸ் சுப்ஹான் அல்லா பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் கடந்த 2019ல் புல்வாமா தாக்குதல் சதித்திட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முரிட்கேயில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயிற்சி மையமான மார்கஸ் தைபா மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்கு வருடந்தோறும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முகாமுக்கு ஒசாமா பின்லாடன் நிதியுதவி வழங்கியதுடன், மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப், டேவிட் ஹெட்லி உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமான பாகிஸ்தானின் பஞ்சாப்பில், தெஹ்ரா கலானில் உள்ள சர்ஜால் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் பதுங்கு குழிகள் அமைத்து ஊடுருவும் வகையிலும், ட்ரோன்கள் மூலம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தவும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதேபோல், சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயா பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு பகுதியில்

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு ஊடுருவவும், ஆயதங்களை கையாளவும் பயிற்சி அளிக்கும் தளமாகவும், 20 முதல் 25 தீவிரவாதிகள் இங்கு தயார்நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

பர்னாலாவில் மர்கஸ் அஹ்லே ஹதீஸ் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் ஊடுருவி தாக்குதல் நடத்த

லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த

100 முதல் 150 பேருக்கு பயிற்சியளிக்கும் தளமாக செயல்பட்டு வந்துள்ளது.

கோட்லியில் மர்கஸ் அப்பாஸ் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தீவிரவாத மையமாக, அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் முப்தி அப்துல் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளது. பூஞ்ச், ரஜோரியில் ஊடுருவி தாக்குதல் நடத்த இங்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வந்துள்ளது.

இதேபோல், கோட்லியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் நீண்டகால பயங்கரவாத முகாமாக செயல்பட்டு வந்த மஸ்கர் ரஹீல் ஷாஹித் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதியில் துப்பாக்கிச்சூடு மற்றும் சண்டையிடுவதற்கான பயிற்சித்தளமாக செயல்பட்டு வந்துள்ளது.

முசாபராபாத்தில் ஷவாய் நல்லா கேம்ப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2000மாவது ஆண்டுமுதல் செயல்பட்டு வரும் இந்த பயங்கரவாத முகாமில் ஜி.பி.எஸ் மற்றும் வரைபடங்களை அறிவது மற்றும் ரைபிள் கையெறி குண்டுகள் போன்றவற்றை கையாள்வதற்கான ஆயுதப்பயிற்சி அளிக்கும் தளமாக செயல்பட்டு வந்துள்ளது. மும்​பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டத்திற்கான அடித்தளமாக செயல்பட்டு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்