வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து வியாபாரி குறிவைத்து தாக்கப்பட்டதுடன், தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கியூர்பாங்கா பசார் பகுதியைச் சேர்ந்த கோகன் சந்திரா என்பவர், புத்தாண்டு தினத்தன்று தனது மருந்தகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கியதுடன், கோகன் மீது தீவைத்து எரித்தது. இதனால் அவர் அலறியடித்தபடி அருகில் இருந்த குளத்தில் குதித்தார். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வங்கதேசத்தில் கடந்த 2 வாரத்தில் 4-ஆவது முறையாக இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீஃப் ஒஸ்மான் ஹாடி படுகொலையைத் தொடர்ந்து, அந்நாட்டில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது...
