Impotence Treatment| ஆண்மையை அதிகரிக்க ரூ.48 லட்சத்திற்கு மருந்து சாப்பிட்டவருக்கு நேர்ந்த விபரீதம்

x

ஆண்மையை அதிகரிக்க ரூ.48 லட்சத்திற்கு மருந்து சாப்பிட்டவருக்கு நேர்ந்த விபரீதம்

பெங்களூருவில் ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் ஆயுர்வேத மருந்து என்று விற்கப்பட்ட மருந்தை 48 லட்சம் ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்ட இளைஞரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது...

இன்றைக்கு மொபைலை திறந்தாலே வித விதமான மூலிகை மருந்துகளுக்கான விளம்பரங்களும், மருத்துவ டிப்ஸ்களும் கொட்டி கிடக்கிறது. அதுபோக, இத மட்டும் சாப்பிட்டு பாருங்க என்று முக்குக்கு முக்கு ஆயுர்வேத மருந்து கடைகளும் முளைத்து வருகிறது.

ஆனால் இப்படி விளம்பரம் செய்யப்படும், விற்பனை செய்யப்படும் மருந்துகள் எல்லாம் அங்கீரிக்கப்பட்டதா? ஆரோக்கியமானவையா? அவை போலியாக இருந்தால் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்விகள் தொடரவே செய்கிறது.

இந்த சூழலில் பெங்களூருவில் சாலையோரத்தில் விற்கப்பட்ட மருந்தை சாப்பிட்டதில் தன்னுடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டதாக இளைஞர் ஒருவர் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலை செய்யும் 29 வயது இளைஞர், ஆண்மை குறைவு பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த மே மாதம் மருத்துவமனைக்கு சென்றுதிரும்பிய போது “ஆண்மை குறைவுக்கு, விரைந்து தீர்வு“ என்ற விளம்பரத்தோடு சாலையோரம் போடப்பட்ட விஜயலட்சுமி ஆயுர்வேத கடைக்கு சென்றிருக்கிறார்.

கடையிலிருந்த விஜய் குருஜி என்பவர், இதை சாப்பிட்டால் ஆண்மை குறைவு சரியாகும் என்று கொடுத்த மருந்தை, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.

இப்படி தொடர்ச்சியாக 17 லட்சம் ரூபாய்க்கு மருந்தை வாங்கி சாப்பிட்டவர் ஒரு கட்டத்தில் வங்கியில் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மருந்துகளை வாங்கியிருக்கிறார். ஆனால் அவரது ஆண்மை குறைவு சரியாகவில்லை.

இறுதியாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனை சென்றிருக்கிறார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டதாக இளைஞரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அதற்கு காரணம் அவர் சாப்பிட்ட மருந்துதான் என சொன்னதும், அதிர்ச்சிக்கு உள்ளான இளைஞர் கொடுத்த புகாரில், விஜய் குருஜி மற்றும் மருத்துவ கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஆண்மை குறைவுக்காக ஆயுர்வேத மருந்து என விற்கப்பட்ட மருந்தை சாப்பிட்ட இளைஞரின் சிறுநீரகம் பாதிப்பு என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாகவே மூலிகை மருந்து என்று போலியாக விற்கப்படும் மருந்துகளை சாப்பிட்டாலே பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்றால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பெறுவதே சரியாக இருக்கும் என அறிவுறுத்துகிறார்கள்.

ஆண்மை அதிகரிப்பு என்று கல்லாகட்டும் கும்பல்களிடம் இருந்து தப்பிக்க, கவர்ச்சி விளம்பரங்களை அப்படியே நம்பாமல், விழிப்புணர்வோடு இருப்பதே சிறந்தது என மக்களை எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


Next Story

மேலும் செய்திகள்