``MGR, ஜெ.வுக்கு பிறந்த மகள் நான்..'' - உச்ச நீதிமன்றத்திற்கே போன பகீர் கடிதம்
`MGR, ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் நான்..'' - உச்ச நீதிமன்றத்திற்கே போன பகீர் கடிதம்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
41 வயதான சுனிதா என்ற பெண், தாம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவிற்கு பிறந்த ஒரே மகள் என்றும், தாம் பிறந்த சூழலின் காரணமாக இருவரும் தன்னை வீட்டு வேலைக்காரர் மாதவன் என்பவர் மூலம் கேரளாவிற்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
தனது இரண்டரை வயதில் தனது தந்தை எம்.ஜி.ஆர் இறந்து விட்டதாகவும், 18 வயதின்போது டி.என்.ஏ பரிசோதனை செய்ததில் ஜெயலலிதா தனது தாயார் என தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதா அவ்வப்போது தன்னை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு அழைத்தார் எனவும், தன்னை அவரது அதிகாரப்பூர்வ மகள் என அறிவிக்க இருந்தார் எனவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மாடி படிக்கட்டில் இருந்து தள்ளிவிடப்பட்ட நிலையில், சுயநினைவின்றியோ அல்லது இறந்த நிலையிலோ கிடந்தார் என்றும், அவரை சுற்றி இளவரசி, டி.டி.வி தினகரன், திவாகரன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வி.கே சசிகலா ஜெயலலிதாவின் கழுத்தில் காலை வைத்து மிதித்ததாகவும், தாம் கத்த முயன்றபோது காவலாளி வெளியே இழுத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
அப்போது தாம் கொண்டு வந்த பையை கூட அங்கு தொலைத்ததாக கூறியுள்ள சுனிதா, அதன் பிறகு கேரளா சென்றதாகவும், இல்லையென்றால் தன்னையும் கொன்று இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று யோசித்ததாகவும், தனது இரண்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வெளியே சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
தனது தாயார் ஜெயலலிதாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தங்களுடைய குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
