Maharashtra | தகர்ந்த தாக்கரேக்கள் கோட்டை.. மஹாராஷ்டிராவில் முழுதாய்க் கைப்பற்றிய பாஜக!
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள மும்பை உட்பட 29 மாநகராட்சிகளில், 25 மாநகராட்சிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது
கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 2,868 இடங்களில் 2,833 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், பாஜக 1,400, சிவசேனா 397, காங்கிரஸ் 324, தேசியவாத காங்கிரஸ் 160, உத்தவ் தாக்கரே-சிவசேனா 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஒன்றுபட்ட சிவசேனாவிடமிருந்து மும்பை மாநகராட்சியை பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணி கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 227 இடங்களில் பாஜக 89 இடங்களை வென்றது, கூட்டணிக் கட்சியான சிவசேனா 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 72 வார்டுகளிலும், காங்கிரஸ் 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு வார்டிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
நவி மும்பை, புனே, நாசிக் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகமான நாக்பூர் மாநகராட்சிகளையும் பாஜக மொத்தமாக கைப்பற்றி உள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மக்கள் விரும்பும் அனைத்தும் இனி எளிதில் கிடைக்கும் என கூறியுள்ளார்.
