கடை வாசலில் கிடந்த ஆண் சடலம் - துப்புக்கொடுத்த காலி பாட்டில்.. சில்லறையால் சிதைந்த உயிர்
வேகாத வெயில்ல தெருவா தெருவா சென்று பிளாஸ்டிக் பாட்டில்கள கலெக்ட் பண்ணி வயிற்ற கழுவின நபர் இப்ப ஒரு கொலை கேஸ்ல கைதாகி இருக்காரு... அவர் மேல ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல கேஸ்கள் இருப்பது தெரியவர அது இப்ப அனைவரையும் அதிர வெச்சிருக்கு...
ஜுன் மாதம் 2 ம் தேதி.. கடலூர் மாவட்டம் சின்னகங்கணாங்குப்பம் பகுதி...
அன்று அதிகாலையில் நடைபயிற்சிக்காக சென்றவர்கள் அங்குள்ள வணிக வளாகத்தின் வாசலில் வாலிபர் ஒருவர் போதையில் மட்டையாகி கிடப்பதாக நினைத்திருக்கிறார்கள்.
ஆனால், அவரின் அருகே சென்றுப்பார்த்தப்போது தான் அவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி சம்பவ இடத்தை அலறி ஆராய்ந்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தடயங்கள் நடந்திருப்பது நிச்சயம் கொலை தான் என்பதை உறுதி செய்தது. மோப்பநாயை அழைத்து வந்த போலீஸார் அதன் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருக்கிறார்கள்.
அந்த நாய் அதே பகுதியிலுள்ள ஒரு காயிலாங்கடை அருகே சென்று நின்றிருக்கிறது.
அந்த கடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை Play செய்து பார்த்தப்போது அதில், கொலையான நபர் காயிலாங்கடையிலிருந்து பணம் வாங்கி சென்றது பதிவாகி உள்ளது.
அதோடு, அந்த சிசிடிவி காட்சியில் நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் காயிலாங்கடை ஓனரிடம் பணம் பெற்று சென்றிருந்தது பதிவாகி இருந்தது.
காவல்துறையினரிடன் அடுத்தடுத்த விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஆதாரும், அட்ரஸும் இல்லாத அன்றாடங்காச்சி என்பது தெரியவந்தது.
அவர் தினமும் தெரு தெருவாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேமித்து அதனை காயிலாங்கடையில் விற்று பிழைப்பை நடத்தி வந்திருக்கிறார்.
கொலையாளியும் காலி பாட்டிகளை கலெக்ட் செய்து அதனை விற்பனை செய்து வருபவர் தான் என்பதை காவல்துறையினர் மற்றொரு சிசிடிவி கேமிரா மூலம் உறுதி செய்திருக்கிறார்கள்.
வாலிபர் சடலமாக கிடந்த கடையின் அருகே இருந்த சிசிடிவியில் நடுத்தர வயது நபர் தலையில் கோணிப்பையை வைத்து நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் சின்னகங்கணாங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள மொத்தம் 32 காயிலாங்கடைகளில் உளவு பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே நாள் முழுக்க காலி பாட்டில்களை சேமித்து கொண்டு அந்த கொலையாளியும் காயிலாங்கடைக்கு வந்திருக்கிறார்.
அவரை சுற்றிவளைத்து விசாரித்தபோது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கொலையாளி 47 வயதான மணிவண்ணன். சம்பவம் நடந்தன்று மணிவண்ணனும், கொலை செய்யப்பட்ட வாலிபரும் ஒன்றாக தான் பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்க சென்றிருக்கிறார்கள்.
அதனை விற்று இருவரும் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் அன்றாடம் படுத்து உறங்கும் பிளாட்ஃபாரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த வாலிபர் மணிவண்ணன் சேமித்து வைத்த பணப்பையை திருடியதாக தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் வெடித்திருக்கிறது. அந்த வாலிபர் மணிவண்ணனை அடித்து ஓடவிட்டிருக்கிறார்.
கொலைவெறியோடு சென்ற மணிவண்ணன் மீண்டும் நடுஇரவில் தன்னை அடித்து அவமானப்படுத்திய வாலிபரை தேடி வந்திருக்கிறார். அப்போது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வாலிபரின் தலையில் பாறங்கல்லை போட்டு மிக கொடூரமாக கொலை செய்ததாக மணிவண்ணன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
