Googlemap | உயிருக்கு உலைவைக்கும் கூகுள் மேப்.. பாறையில் தொங்கியபடி துடித்த உயிர் -அதிர்ச்சி சம்பவம்
மேப்பை நம்பி பைக்கில் சென்று கிணற்றில் விழுந்த இளைஞர் மீட்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் செல்போன் மேப்-ஐ நம்பி, பைக்கில் சென்ற இளைஞர் 15 அடி ஆழ கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுன்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்தேஷ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர், ராய்பரேலியில் உள்ள சொந்த கிராமத்திற்கு செல்லும் வழி தெரியாததால், தொலைபேசியில் மேப் காட்டிய வழியில் சென்றுள்ளார்.
நள்ளிரவு 12 மணியளவில் நாக்ராம் - குஜோலி சாலையில், குறுகிய வளைவில் திரும்பும் போது தடுமாறிய பைக், சாலையின் அருகே இருந்த வயலில் உள்ள கிணற்றின் சுற்றுச் சுவரில் மோதியது. இதில் தவறி கிணற்றுக்குள் விழுந்த இளைஞர், சுமார் 50 நிமிடங்கள் இருட்டில் ஒரு பாறையைப் பிடித்துக்கொண்டு உதவிக்காக கத்தியுள்ளார்.
அதிஷ்டவசமாக அங்கே ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அலறல் சத்தத்தை கேட்டு இளைஞரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் மீட்க கயிறு ஏதும் இல்லாததால் காவலர்கள் தாங்கள் அணிந்திருந்த மப்ளர் மற்றும் துப்பட்டா அகியவற்றை ஒன்று சேர்ந்து கயிறாக்கி, அதனை கிணற்றுக்குள் விட்டு, சுமார் 30 நிமிட முயற்சிக்குப் பின்னர் போராடி இளைஞரை மீட்டுள்ளனர்.
