போலி மருந்து தொழிற்சாலை - JCM மக்கள் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

x

போலி மருந்து தொழிற்சாலை - JCM மக்கள் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் அரசுக்கு எதிராக, JCM மக்கள் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு சீல் வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இரண்டு நாட்கள் ஆகியும் முதல்வர் ரங்கசாமி தரப்பிலிருந்து பதில் வரவில்லை எனக்கூறி,

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட JCM மக்கள் மன்றத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை முதலமைச்சர் மூடி மறைப்பதாகக் கூறி கையில் பதாகைகள் ஏந்தி, ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்