பல மாநிலங்களை அலறவிட்ட போலி IAS...சொகுசு காரில் சொகுசாக வந்து சிக்கிய கதை
மத்திய அரசில் அமைச்சரவை செயலாளர் எனக் கூறி வலம் வந்த போலி நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட செளரப் திரிபாதி என்ற அந்த நபர், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி பலரை ஏமாற்றியுள்ளார். மேலும் மத்திய அரசின் அமைச்சரவை செயலாளர் எனக் கூறி உத்தரப்பிரதேச மாநில அரசின் சார்பில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் இந்த நபர் கலந்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அதிகாரியாக தன்னை பந்தாவாக காட்டிக்கொண்டதோடு, ஃபார்ச்சூனர், இனோவா உள்ளிட்ட சொகுசு கார்களிலும் வலம் வந்துள்ளார். இந்நிலையில் வாகன சோதனையின்போது காவல் ஆய்வாளர் ராஜேஷ் குமார் திரிபாதி என்பவரிடம் செளரப் திரிபாதி சிக்கினார். உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி தனது கைவரிசையை காட்டியது தெரியவந்துள்ளது. செளரப் திரிபாதியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆறு சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
