EPFO News | நீங்க என்ன வேலை பாத்தாலும் சரி.. ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் மாறும் நடைமுறை
கட்டாய பிஎஃப் பங்களிப்புக்கான சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், பணியாளர்களின் கையில் கிடைக்கும் டேக் ஹோம் சேலரியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் திட்டம் என்ன என்பதை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு... நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சுமார் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், கட்டாய பிஎஃப் பங்களிப்புக்கான தற்போதைய சம்பள உச்சவரம்பை 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த உச்சவரம்பு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இந்த மாற்றம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வு காரணமாக தற்போதைய பிஎஃப் பங்களிப்பு மற்றும் ஓய்வூதியத் தொகை போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. தற்போது பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுபவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. மேலும், 15,000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற உச்சவரம்பு காரணமாக, லட்சக்கணக்கான ஊழியர்கள் முறையான ஓய்வூதியப் பயன்களைப் பெற முடியாமல் இத்திட்டத்திலிருந்து வெளியே தள்ளப்படும் சூழலும் நிலவுகிறது. தற்போது, 15 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு PF கட்டாயம். அதற்கு மேல் இருந்தால் கட்டாயம் இல்லை. தவிர, சம்பள உச்சவரம்பு 15,000 ரூபாயாக இருப்பதால், ஒருவரின் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் 15,000 ரூபாய்க்கு இணையான தொகை மட்டுமே ஓய்வூதியக் கணக்கிற்குச் செல்கிறது. ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதம் பிஎஃப் கணக்கிற்குச் செல்லும். அதற்கு இணையாக நிறுவனமும் 12 சதவீதத் தொகையை வழங்குகிறது. எனவே, சம்பள உச்சவரம்பு 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் சேரும் ஒட்டுமொத்தத் தொகையும் கணிசமாக அதிகரிக்கும். இது அவர்களின் ஓய்வுக்கால பங்களிப்பை உயர்த்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெறப்போகும் மாதாந்திர பென்ஷன் தொகையும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள் பலர் விதிகளின்படி கட்டாயம் இல்லை என்பதால் எந்தவொரு ஓய்வூதியத் திட்டத்திலும் சேராமல் உள்ளனர். இந்த உச்சவரம்பு உயர்வு அவர்களையும் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் சூழலை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது குறித்துப் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மாற்றம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் டேக் ஹோம் சம்பளம் மற்றும் நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு செலவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே நேரம், புதிய நடைமுறை பற்றிய அறிவிப்பு வெளியானால் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
