திராவிட வரலாறு - கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் நன்கொடை வழங்கிய சபரீசன், செந்தாமரை ஸ்டாலின்
திராவிட வரலாறு, அரசியல் பற்றிய உலகத்தரமான ஆய்வை முன்னெடுக்கும் வகையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரபல தொழில்நுட்பத் துறை தொழில்முனைவோரான சபரிசன் மற்றும் கல்வியாளரான அவரது மனைவி செந்தாமரை ஸ்டாலின், பெருந்தொகையை நன்கொடையாக அறிவித்துள்ளனர். இந்த ஆய்வுப் பரிசு, திராவிட இயக்கத்திலிருந்து உருவான அரசியல் சிந்தனை, கொள்கை வகுப்பு, பொருளியல் மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆராயும் முனைவர் பட்ட ஆய்வாளருக்கும், முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளருக்கும் தொடர்ச்சியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உதவித்தொகைக்கு மு.கருணாநிதி ஆய்வு உதவித்தொகை என்று பெயரிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனிதவியல் துறை - சமூக அறிவியல் துறைக்குள் அமைந்துள்ளது. இதுகுறித்து சபரீசன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆய்வுப் பரிசு, திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், அந்த இயக்கம் பற்றிய ஆய்வுகள் உலகத்தரமான புலமை-கொள்கை வகுப்பு உரையாடல்களின் ஒருபகுதியாக மாறுவதை உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.
