"ரயில்களுக்கு மாநில மொழியில் பெயர் சூட்ட வேண்டும்" - எம்.பி தங்க தமிழ்செல்வன் வேண்டுகோள்
"ரயில்களுக்கு மாநில மொழியில் பெயர் சூட்ட வேண்டும்" - எம்.பி தங்க தமிழ்செல்வன் வேண்டுகோள்
ரயில்களுக்கு பெயர் வைக்கும்போது, தமிழ் அல்லது மாநில மொழி சார்ந்த பெயர்களை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக எம்.பி. தங்கத் தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற ரயில்வே திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர்,
ரயில்வே துறையில் மண்டல வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கும்போது, அந்தந்த மாநில மொழி தெரிந்த நபர்களை நியமித்தால் தான் பயணிகளுக்கு பயனளிப்பதாக இருக்கும் என்றார்.
ரயில் விபத்துக்களை தடுக்க உதவும் கவச் பாதுகாப்பு தொழில்நுட்பத் திட்டத்திற்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், இன்னும் பல ரயில் விபத்து நேரிடுவதாக அவர் கூறினார்.
ரயில்களில் கழிப்பறை தூய்மையாக பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், கண்காணிப்பாளரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பெண் ரயில் ஓட்டுநர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ரயில்களுக்கு பெயர் வைக்கும்போது வந்தே பாரத், தேஜஸ், நமோ பாரத் என பெயர் வைக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள ரயில்களுக்கு சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், வைகை மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் என தமிழில் பெயர் வைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
ரயில்களுக்கு தமிழ் மொழி அல்லது பிராந்திய மொழிகளில் பெயர் வைத்தால் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் அப்போது கூறினார்.
